பகுத்தறிவு
மெய்ப்பொருள் காண்பது அறிவு
27.12.10
25.12.10
தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே! - 1
பகுத்தறிவுப் பகலவன் எனப் புகழப்படும் தந்தை பெரியார் நாத்திகர் இல்லை என்றும் நாத்திகம் என்னும் கருவியின் வழி கடவுள் கொள்கையைச் சொன்னவர் என்றும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் மு. தெய்வநாயகம் அவர்களின் சில கூட்டங்களில் கேட்டிருக்கிறேன். கடந்த திசம்பர் 12ஆம் நாள் சென்னை திருவொற்றியூரில் நடந்த திருமண நிகழ்விலும் பேராசிரியர் அக்கருத்தை வலியுறுத்திச் சொன்னார். சாதியையும் மதத்தையும் உருவாக்கி அதில் குளிர் காயும் கூட்டத்தைச் சாட வந்த பெரியார், அக்கூட்டம் உருவாக்கி வைத்திருந்த சாதி ஏற்றத்தாழ்வு என்னும் பேய்க்கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். அச்சூழலில் அக்கொள்கையைக் கொண்டிருந்தோர் தங்கள் கொள்கைக்குக் கடவுள் வழியமைத்துக் கொடுத்ததாகக் கூறிய போது அந்தப் போலிக் கடவுளை அவர் எதிர்த்தார் என்பது பேராசிரியரின் கருத்து ஆகும்.
இக்கருத்தைத் தந்தை பெரியாரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம். பெரியார் தம்முடைய ‘குடி அரசு’ ஏட்டில் நாத்திகம் பற்றியும் கடவுள் பற்றியும் கூறுகிறார். அக்கருத்து பின்வருமாறு:
‘நமது நிலைக்குக் காரணமென்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மையென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயர்ச்சிக்கும் எவனாலும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.
ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவைகளைக் காப்பாற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப்பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை. இவைகளில் எங்கு கை வைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப்பார்த்து விடுவார்கள். நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள். ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு பயப்படாமல் “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக்கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய், நாஸ்திகப் பிரசாரமேயாகும். அதாவது “எனக்கு இந்த மதம் வேண்டாம், இந்த சாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும்; எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும்” என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும்.”
(குடி அரசு – சொற்பொழிவு – 14.09.1930)
கவனித்தீர்களா? தந்தை பெரியார் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்காரர்கள் உருவாக்கி வைத்திருந்த போலிக்கடவுள் கொள்கையை அல்லது பேய்க்கொள்கையை எதிர்க்கிறாரேயன்றிக் கடவுள் கொள்கையை எதிர்க்கவில்லை. அதிலும் ‘நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு’ என்று சொல்வதன் மூலம் ‘நாத்திகத்தை’க் கடவுள் கொள்கையை வலியுறுத்தும் ஒரு கருவியாகத் தான் தந்தை பெரியார் பயன்படுத்தினார் என்பது புலனாகிறது அல்லவா?
22.12.10
கல்வி வேறு அறிவு வேறு!
கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் குருட்டு உருப்போட்டு பரிட்சைகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச்சங்கத்தில் படித்து வித்வான் பரிட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது அலமாரியில் உள்ள புஸ்தகங்களைப் போல் இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களை “பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி” என்று தான் சொல்ல வேண்டும்.
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக ஒரு பூகோள சாஸ்திரத்தில் எம்.ஏ. (பண்டித) பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் பிள்ளைகளுக்கு சூரிய சந்திர கிரகணத்தைப் பற்றி வான சாஸ்திரப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது பூமியும் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சுற்றுவதின் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுர்தியும் ஒளியும் மறைவுபடும். அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரிய கிரகணம் என்றும் சொல்வது என்று பாடம் சொல்லிக் கொடுப்பான்.
ஆனால் சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ வந்து விட்டால் சூரியன் என்கின்ற ஒரு தேவதையை இராகு, கேது என்கிற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும் இது அவர்களுக்கு ஏற்பட்ட சாபத் தீடு என்றும் அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு கிரகணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும் விடும்போது ஒரு ஸ்நானமும் மத்தியில் மந்திரங்களும் ஜெபங்களும் செய்வான். சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர கிரக நட்சத்திரமும் கிரகண நேர கிரக நட்சத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக்கொண்டு முழுகுவான். ஆகவே அவனது படிப்பானது வான சாஸ்திர பரிட்சையில் தேறத்தான் உபயோகப்பட்டதே தவிர அந்த எம். ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்கு சற்றும் பயன்படவே இல்லை.
(பெரியார் – குடிஅரசு- சொற்பொழிவு-27.07.1930)
21.12.10
கல்வியே செல்வம்
நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும் கும்பாபிஷேகம் செய்வதற்கும் பூஜை, உற்சவம் நடத்துவதற்கும் நாசமாகிற பணங்களும் இடங்களும் நேரங்களும் இம்மாதிரி வாசகசாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறு மடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும்.
நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம். ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது. மற்றொன்று மக்களுக்குப் பகுத்தறிவில்லாமல் இருப்பது. இந்த இரண்டும் வாசகசாலையை ஏற்படுத்தவிடாமல் குழவிக்கல்லை நட்டி கோவில் கட்டுகிற வேலையில் மக்களை திருப்பிவிட்டது.
***
ஒரு நாட்டின் மதக் கொள்கைக்கும் ஆட்சியின் தன்மைக்கும் அளவுகோள், அந்த நாட்டு மக்களின் கல்வியறிவே யாகும். நமது நாட்டில் நூற்றுக்கு 93 பேர் கல்வியில்லாத தற்குறிகள். நூற்றுக்கு 99 பேர் கல்லில் முட்டிக்கொள்ளும் மூடர்கள். இப்படிப்பட்ட இந்த நாடு எப்படி அறிவுள்ள ஒரு சுதந்திரமான நாடாகும்?
- குடிஅரசு - சொற்பொழிவு - 27.07.1930
19.11.10
கடவுளைச் சொல்லக் காசு எதற்கு?
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பெயரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கிறார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகிறார்கள். இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள் துறவிகள் மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துகளும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?
அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கிறதென்று எந்தப் பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன்.
ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குளவிக்கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குளவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை ஒட்டகை குதிரை பல்லக்கு தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா? (தொடரும்)
(பெரியார் - குடியரசு – சொற்பொழிவு – 14.09.1930)
17.11.10
கேள்வி – விடை
கே: கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது, உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசீயக் கட்சி முதலிய பல கட்சிகள்
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!
கே: ஏன்?
வி: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை. பணம் கேட்பதில்லை. உத்தியோகம் கேட்பதில்லை. பதவி கேட்பதில்லை. பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும் பணத்தையும் செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
(குடியரசு – உரையாடல் – 21.12.1930)
7.11.10
இல்லது என் இல்லவள் மாண்பானால்?
அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச்சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது. பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வது தான் தங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டும். புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும்.
(பெரியார் 10.07.1930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி – 13.07.1930 நாளைய குடியரசு இதழில் வெளியானது)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)